கிழக்கு லிபியாவில் டெர்னா துறைமுக நகரின் பகுதிகளை முற்றாக அழித்திருக்கும் பயங்கர வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் பாரிய புதைகுழிகளில் அடக்கம் செய்யப்பட்டுள்ளன.
கடந்த ஞாயிற்றுக்கிழமை டானியல் புயல் தாக்கியதை அடுத்து ஏற்பட்ட வெள்ளத்தில் அணை ஒன்று உடைப்பெடுத்து டெர்னா நகரில் வெள்ள நீர் சுனாமி அலை போல பாய்ந்துள்ளது. இந்த அனர்த்தத்தில் குறைந்தது 2,300 பேர் உயிரிழந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அடக்கஸ்தலம் ஒன்றில் இயந்திரம் மூலம் பாரிய குழி தோண்டப்பட்டு உயிரிழந்தவர்களின் உடல்கள் பைகளில் இட்டு ஒன்றாக புதைக்கப்பட்டுள்ளன.
தொடர்ந்து 10,000 பேர் வரை காணாமல்போயிருக்கும் நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
மீட்பாளர்கள் பாதிக்கப்பட்டவர்களை தொடர்ந்து தேடி வருகின்றனர் என்று டெர்னாவில் உள்ள தன்னார்வலர் ஒருவரான முஹமது கமட்டி தெரிவித்துள்ளது.
“மருத்துவர்கள் மற்றும் மருத்துவர்களுடன் தொடர்புபட்ட அனைவரும் முன்வந்து உதவுமாறு நாம் கோருகிறோம்” என்று அவர் ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.
எகிப்து உட்பட சில இடங்களில் இருந்து உதவிகள் வர ஆரம்பித்தபோதும் லிபியாவில் நீடிக்கும் அரசியல் நிலைமை உதவிகளை பெறுவதில் இடையூறை ஏற்படுத்தியுள்ளது. லிபியாவில் இரு போட்டி அரசுகள் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா, ஜெர்மனி, ஈரான், இத்தாலி, கட்டார் மற்றும் துருக்கி உட்பட பல நாடுகள் உதவிகளை அனுப்பியதாகவும் அல்லது அனுப்ப தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளன.
எனினும் இந்த அனர்த்தம் இடம்பெற்ற 36 மணி நேரத்திற்கு பின்னர் கடந்த செவ்வாய்க்கிழமையே டெர்னா நகருக்கு உதவிகள் வர ஆரம்பித்திருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
டெர்னா நகரில் இருந்து 12 கிலோமீற்றர் தொலைவில் இருக்கும் அணை ஒன்று உடைப்பெடுத்த நிலையில் அதன் நீர் பள்ளத்தாக்கை நோக்கி பாய்ந்து நகருக்கு அருகில் இருக்கும் இரண்டாவது அணை நிரம்ப காரணமாகி இருக்கலாம் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
சுமார் 100,000 மக்கள் வசிக்கும் டெர்னா நகரில் வெள்ள நீர் புரண்டோடுவது மற்றும் வாகனங்கள் அந்த வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுவது வீடியோ காட்சிகளில் பதிவாகியுள்ளது.
ஏராளமான மக்கள் கடலுக்குள் அடித்துச் சென்ற கொடூரமான சம்பவங்கள் பல நடந்திருக்கின்றன. மற்றவர்கள் வீட்டின் மேல் தளங்களிலும் மொட்டை மாடிகளிலும் தஞ்சம் அடைந்துள்ளனர்.
“நான் பார்த்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன், இது ஒரு சுனாமி போன்றது” என்று லிபியாவின் கிழக்குப் பகுதி அரசைச் சேர்ந்த ஹிஷாம் சிகியோவாட் கூறினார். (தினகரன்)
No comments