மன்னார் பொலிஸ் பிரிவில் உள்ள கிராமம் ஒன்றில் 17 வயதுடைய சிறுமி ஒருவர் மூன்று நபர்களால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட நிலையில் மன்னார் பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த மூவர் மன்னார் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மன்னார் பெரிய கமம் பகுதியை சேர்ந்த 23,18,17 வயதுடைய இளைஞர்கள் மூவர் மேற்படி சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த மூன்று நபர்களும் சிறுமியின் நிர்வாண புகைப்படத்தை வைத்திருந்ததோடு அப்புகைப்படத்தை நண்பர்களிடமும் பரிமாறி கொண்டுள்ளனர்.
அப்புகைப்படங்களை வைத்து சிறுமியை மிரட்டி துஷ்பிரயோக சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
அதே நேரம் சம்பவத்தின் பிரதான குற்றவாளியாக சந்தேகிக்கப்படும் வாகன திருத்தகம் ஒன்றில் பணிபுரியும் 23 வயதுடைய நபர் சிறுமியை துஷ்பிரயோகம் செய்ததுடன் அவரிடம் இருந்து 2 ஆயிரம் ரூபாய் பணத்தையும் வலுக்ககட்டாயமாக அபகரித்து சென்றுள்ளார்.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் அவரின் தாயார் மன்னார் பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டின் அடிப்படையில் மன்னார் பொலிஸார் குறித்த சந்தேக நபர்கள் மூவரையும் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் குறித்த மூவரும் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதோடு, குறித்த சந்தேக நபர்கள் மூவரையும் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
மன்னார் குறூப் நிருபர்
No comments