கல்விப் பொது தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் இன்னும் சில தினங்களில் வெளியிடப்படுமென, கல்வியமைச்சர் சுசில் பிரேம ஜயந்த பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இதற்கான நடவடிக்கைகள் பூத்தியடையும் நிலையில் காணப்படுவதாகவும் அவர் சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான இறுதி நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்;
இம்முறை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை வரலாற்றில் முதல் தடவையாக ஒருமாத காலத்தில் வெளியிட நடவடிக்கை எடுத்தோம். அதேவேளை, கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சையை நடத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தியாகியுள்ளன. விடைத்தாள் திருத்த நடவடிக்கைகள் பிற்படுத்தப்பட்டதால் கடந்த வருட உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள், மூன்று மாதங்கள் வரை தாமதமாயின. அவ்வாறில்லாவிட்டால் உயர் தரப் பரீட்சையை இந்த மாதத்தில் நடத்துவதற்கே தீர்மானித்திருந்தோம்.
அத்துடன் நாடு பொருளாதார நெருக்கடியிலிருந்து தற்போது படிப்படியாக ஸ்திர நிலைக்கு முன்னேற்றமடைந்து வருகிறது. பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலேயே நாம், பாடசாலைகளுக்கான இலவச நூல்களை அச்சிடுகிறோம்.
இதற்காக 19 பில்லியன் ரூபா நிதியை ஒதுக்கியுள்ளோம். பாட நூல்களை அச்சிடும் நடவடிக்கைகள் தற்போது முடிவடையும் நிலையில் உள்ளன. ஜனவரி மாதத்தில் அனைத்து பாடசாலைகளுக்குமான இலவச பாடநூல் விநியோகம் இடம் பெறவுள்ளது. (தினகரன்)
No comments