2024 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் பெறுமதி சேர் வரிக்கு (VAT) விண்ணப்பிப்பதற்காக திட்டமிடப்பட்டுள்ள 138 பொருட்களில் 97 பொருட்களை மீள் மதிப்பீடு செய்வதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதாக ராஜாங்க நிதி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய நேற்று தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில், உள்ளூர் உணவு உற்பத்தியை VAT முறைக்குள் இணைப்பதற்கான தீர்மானம் தொடர்பில் விசேடமாக கலந்துரையாடும் போதே ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதனைத் தெரிவித்தார்.
உத்தேச VAT வரி விலக்குகளை நீக்குவது தொடர்பாக பல்வேறு தரப்பினர் முன்வைக்கும் கவலைகளை கவனத்தில் கொள்ள அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.
VAT இல் இருந்து விலக்களிக்கப்பட்ட பொருட்களின் பட்டியலைத் திருத்துவதன் மூலம் அரசாங்கம் ரூ.378 பில்லியன் வருமானத்தை ஈட்ட எதிர்பார்க்கிறது என்றார்.
2024 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 9.2 வீதமாக இருக்கும் தனது வருவாயை 12 வீதமாக அதிகரிப்பதற்கு அரசாங்கம் இலக்கு வைத்துள்ளதாகவும், இந்த இலக்கை அடைய வருமான வரி கட்டமைப்பில் திருத்தங்களை அமுல்படுத்துவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் சியம்பலாபிட்டிய குறிப்பிட்டார்.
பல ஆண்டுகளாக குறுகிய கால பேண்ட்-எய்ட் தீர்வுகளை நம்பியிருந்த நாடு, அதன் பொருளாதார பிரச்சினைகளுக்கு நீண்டகால, நிலையான தீர்வைத் தொடர்வதற்கான சரியான தருணத்தை எட்டியுள்ளதாக அமைச்சர் எடுத்துரைத்தார்.
வரி அதிகரிப்புக்கான காரணங்களை எடுத்துரைத்த சியம்பலாபிட்டிய, 2023 இல் 187 பில்லியன் ரூபா நலன்புரிச் செலவு, 2024 இல் 207 பில்லியனாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் , அரசாங்க வருமானத்தில் 70 வீதம் கடன் வட்டியாக செலுத்தப்பட உள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
அரசாங்கம் ஜனவரி 1, 2024 முதல் VAT விகிதத்தை 3 சதவிகிதம் 18 சதவிகிதமாக உயர்த்தியுள்ளது, மேலும் கல்வி, சுகாதாரம் மற்றும் சில அத்தியாவசிய உணவுப் பொருட்கள் தவிர VAT விலக்குகளை நீக்க முன்மொழியப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (DM)


![[HeaderImage]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhdaYOs_xHtDuSb5MU95ul6pUZI9rQHCDnKN84ClViy_Fs5TAIcChTog0hlIeMMTpklTjht5ZCycj_UrjH4BlDa7XdD9Hg5YNVwXlonILHCK8hB4XOFl7Xn0p68ocfmTQC8KcBocKOWniwqchOf-6bQ9oDtYcBMlLa4xRYP-muMtpArlDQIZ4E6pY00YkkV/s16000/Ministry-Of-Finance.jpg)





No comments