தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்துடன் இணைந்து இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம் ஏற்பாடு செய்திருந்த சுதந்திர ஊடகவியலாளர் தெரிவும், அவர்களுக்கான ஒரு நாள் ஊடகத்துறைசார் செயலமர்வும் அண்மையில் (2024.04.20) இடம்பெற்றது.
இலங்கையிலுள்ள அனைத்துப் பிரதேச செயலகங்களிலிருந்தும் ஒருவர் வீதம் தெரிவு செய்யப்பட்டு இந்த நியமனமும், அறிமுக நிகழ்வும் வழங்கப்பட்டிருந்தது.
மஹரகம தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் குளியாபிடிய கிழக்கு பிரதேச செயலகம் சார்பாக தொரணேகெதரயைச் சேர்ந்த அன்வர் மொஹமத் அஸ்ஜத் சுதந்திர ஊடகவியலாளராக நியமனம் பெற்றிருந்தார்.
தொடர்ச்சியாக தொரணேகெதர அஸ்ஜத் இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் பிராந்திய செய்தி நிருபராக கடமை புரிய இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் கலாநிதி பிரசாத் சமரசிங்க அவர்களினால் நியமனம் வழங்கப்பட்டது.
நாடு பூராகவும் உள்ள பிரதேச சபைகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட சுமார் 340 க்கு மேற்பட்ட சுதந்திர ஊடகவியலாளர்களுக்கான சான்றிதழ்களை தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பணிப்பாளர் நாயகம் கௌரவ பசிந்து குணரத்ன வழங்கி கௌரவித்ததோடு, தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான ஊடக அடையாள அட்டையும் விரைவில் வழங்கி வைக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டிருந்தது.
இதேவேளை தொரணேகெதரையைச் சேர்ந்த அன்வர் மொஹமட் அஸ்ஜத் பிறைநிலா ஊடக வலையமைப்பின் பிரதிச் செயலாளராகவும், உத்தியோகபூர்வ புகைப்பட மற்றும் வீடியோக் கலைஞராகவும் செயற்படும் சம காலத்தில் புகைப்படத்துறை கற்கைநெறியை முறையாகக் கற்றிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
சப்ராஸ் அபூபக்கர்
சிரேஷ்ட ஊடகவியலாளர்
No comments