Page Nav

Pages

தலைப்புச் செய்திகள்

latest
tamilsolution_ad_alt

மக்கள் விடுதலை முன்னணிக்கு வாக்களிக்க மக்கள் முட்டாள்கள் அல்ல - ராஜித சேனாரத்ன தெரிவிப்பு

 


இடம்பெற இருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்புகளின் படி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்குமே போட்டி நிலவுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.


ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று  (27.08.2024) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 


அவர் அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,


“மக்கள் விடுதலை முன்னணி ஊடக களியாட்டங்களை நடத்தி, மக்களை ஒன்று திரட்டினாலும் மூன்றாவது இடத்தில் தான் இருக்கிறது. மக்கள் விடுதலை முன்னணியின் இவ்வாறான களியாட்ட நிகழ்வுகள் ராேஹன விஜேவீரவின் காலத்திலும் இருந்தது.


கடந்த முறை காலிமுகத்திடலை நிரப்புவதாக தெரிவித்து, யாரும் செய்ய முடியாத அளவுக்கு மக்களை திரட்டி காலிமுகத்திடலை நிரப்பினார்கள். ஆனால் தேர்தலில் அவர்களுக்கு நூற்றுக்கு 3 வீதமே கிடைத்தது.


அதனால் அவர்களின் கூட்டங்களுக்கு மக்கள் வருகிறார்கள் என்பதற்காக அவர்களுக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். ஏனெனில் இந்த நாடு பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட மக்கள் விடுதலை முன்னணியின் கலவரமும் காரணமாகும்.


அவ்வாறான வரலாற்றைக் கொண்ட மக்கள் விடுதலை முன்னணிக்கு வாக்களிக்க மக்கள் முட்டாள்கள் அல்ல. அவர்களின் வரலாறு தெரியாதவர்களே அவர்களுக்கு வாக்களிக்கின்றனர்.


என்றாலும் அவர்களின் பொய் வாக்குறுதிகளை நம்பி இந்த முறை வாக்கு வீதம் அதிகரிக்கும் என நம்புகிறோம். ஆனால், அவர்கள் எங்களுக்கு சவால் இல்லை.


ரணில் விக்ரமசிங்க இன்னும் தேர்தல் பிரசாரத்தை முறையாக ஆரம்பிக்கவில்லை. அவ்வாறு இருந்தே சஜித் பிரேமதாசவுக்கு சமமான சவாலை கொடுத்து வருகின்றார்.


தேர்தல் பிரசாரத்தை ஆரம்பித்தால், சஜித் பிரேமதாசவும் எமக்கு சவாலாக இருக்க மாட்டார். நாங்கள் முன்னோக்கி செல்வோம்” என்றார்.  (LSN)


No comments