2024 பொதுத் தேர்தல், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி, 6 சாதனைகளை முறியடித்து, நாடாளுமன்றத்தை கைப்பற்றியுள்ளது.
2020இல் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன பெற்ற 6,853,690 வாக்குகளை விஞ்சி, 6,863,186 வாக்குகளை தேசிய மக்கள் சக்தி பெற்றுள்ளது. இது பொதுத் தேர்தலில் அரசியல் கட்சியொன்று பெற்ற அதிகூடிய வாக்குகளாகும்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு, 2020இல் பெற்ற 60.33 வீத வாக்குகளையும் முந்தி, 61.56 வீத வாக்குகளை தேசிய மக்கள் சக்தி பெற்றுள்ளது. 22 தேர்தல் மாவட்டங்களில் 21 இல் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது.
மட்டக்களப்பை மட்டும் அது இழந்துள்ளது. முன்னதாக, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 2010 இல் 19 மாவட்டங்களில் மாத்திரமே வெற்றி பெற்றிருந்தது.
அத்துடன், அந்தக்கட்சி 2010ஆம் ஆண்டில் 136 தொகுதிகளில் மாத்திரமே வெற்றிப் பெற்றது. எனினும் தேசிய மக்கள் சக்தி 152 தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளது.
141 மாவட்ட அளவிலான ஆசனங்கள் மற்றும் 18 தேசியப் பட்டியல் ஆசனங்கள் உட்பட மொத்தம் 159 ஆசனங்களைக் கைப்பற்றிய தேசிய மக்கள் சக்தி, இலங்கையின் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையின் கீழ் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்ற முதல் தனிக் கட்சியாக மாறியுள்ளது.
இது 2020இன் 145 மொத்த இடங்கள் மற்றும் 17 தேசிய பட்டியல் இடங்கள் என்ற பொதுஜன பெரமுனவின் சாதனையை முறியடித்துள்ளது.
கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட்ட விஜித ஹேரத் 716,715 விருப்பு வாக்குகளைப் பெற்று தேர்தல் வரலாற்றில் இடம்பிடித்துள்ளார். இது இலங்கையில் இதுவரை ஒரு வேட்பாளர் பெற்ற அதிகூடிய விருப்பு வாக்குகளாகும்.
2015 இல் ரணில் விக்கிரமசிங்க (500,566 வாக்குகள்), 2020 இல் மஹிந்த ராஜபக்ச (527,364 வாக்குகள்), மற்றும் ஹரிணி அமரசூரிய, 2024 தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் இருந்து பெற்ற 655,289 வாக்குகளே முந்திய சாதனைகளாக இருந்தன.
இந்தத் தேர்தல், பெண்களின் பிரதிநிதித்துவத்தில் ஒரு மைல்கல்லைக் கண்டுள்ளது. இலங்கையின் நாடாளுமன்ற வரலாற்றில் 21 பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்ட அதிகூடிய சாதனை தற்போது நிகழ்த்தப்பட்டுள்ளது.
அவர்களில் ஹரிணி அமரசூரிய, கௌசல்யா ஆரியரத்ன மற்றும் சமன்மலி குணசிங்க போன்ற முக்கிய பிரமுகர்கள் உட்பட 19 பேர் தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.
ரோஹினி குமாரி விஜேரத்ன மற்றும் சமிந்திரனி கிரியெல்ல ஆகிய இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து தெரிவு செய்யப்பட்டனர்.
அதேநேரம், 2020இல் 3 வீதமாக இருந்த தேசிய மக்கள் சக்தியின் வாக்கு வீதம் 61ஆக வரலாற்று பாய்ச்சலை கண்டமையானது, மக்களின் உணர்வுகளில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் காட்டுகிறது. (LSN)
No comments