இஸ்ரேலுக்கும் லெபனானின் ஹிஸ்புல்லா போராளிகளுக்கும் இடையிலான போர்நிறுத்தம் இன்று ஆரம்பமாகியுள்ளது.
இதன்படி நேற்று அறிவிக்கப்பட்ட இந்த போர்நிறுத்தம், இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே காஸாவில் நடந்து வரும் போரினால், ஏறக்குறைய 14 மாதகால சண்டையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு முக்கிய படியாக கருதப்படுகிறது.
இந்தநிலையில் தற்போது வரை போர்நிறுத்தத்தை மீறியதாகக் கூறப்படும் உடனடி அறிக்கைகள் எதுவும் வெளியாகவில்லை.
பெய்ரூட்டில் இந்த போர் நிறுத்தத்தின் மகிழ்ச்சியை காணமுடிவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், ஹிஸ்புல்லா ஒப்பந்தத்தை மீறினால் தாக்கப்படுவார்கள் என்று இஸ்ரேல் எச்சரித்துள்ளது.
போர்நிறுத்த உடன்பாட்டின்படி, இரண்டு மாதங்களுக்கு சண்டையை நிறுத்துவதற்கு இணங்கப்பட்டுள்ளது.
அத்துடன், தெற்கு லெபனானில் ஹிஸ்புல்லா தனது ஆயுதப் பிரசன்னத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும், அதே நேரத்தில் இஸ்ரேலிய துருப்புக்கள் தங்கள் எல்லைக்கு திரும்ப வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
ஆயிரக்கணக்கான கூடுதல் லெபனான் துருப்புக்கள் மற்றும் ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் படையினர் தெற்கில் நிலைநிறுத்தப்படுவார்கள்.
அத்துடன், அமெரிக்கா தலைமையிலான சர்வதேச குழு போர் நிறுத்த இணக்கத்தை கண்காணிக்கும் என்றும் போர் நிறுத்த உடன்படிக்கையில் இணங்கிக்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், போர் நிறுத்தம் இன்று அதிகாலை 4 மணிக்கு ஆரம்பித்தது. எனினும் ஹமாஸின் பிடியில் இஸ்ரேலிய பணயக்கைதிகள் பலர் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், காஸாவில் போரை நிறுத்தும் என்ற முன்னெடுப்புகளும் இன்னும் சாத்தியமாகவில்லை. (LSN)
No comments