அவுஸ்திரேலியாவில் 16 வயதுக்கு உட்பட்டவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்கு தடைவிதிக்கும் சட்ட மூலத்திற்கு அந்த நாட்டு பாராளுமன்றம் அங்கீகாரமளித்துள்ளது.
செனெட்டில் இந்த சட்ட மூலத்திற்கு ஏற்கனவே அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்த நிலையில் சனப்பிரதிநிதிகள் சபையும் இதற்கு ஆதரவளித்துள்ளது.
சிறுவர்களை சமூக ஊடகங்களின் பாதிப்பிலிருந்து பாதுகாப்பதை நோக்கமாக கொண்டதே இந்த சட்டம் என பிரதமர் அன்டனி அல்பெனிஸ் தெரிவித்துள்ளார்.
அவரது கருத்தினை ஆதரிக்கும் விதத்தில் அவுஸ்திரேலியாவில் பெற்றோர்களும் கருத்து வெளியிட்டுள்ளனர்.
இந்த தடை நடைமுறைக்கு வருவதற்கு ஒருவருடமாகலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.'
இந்த சட்டத்தை தொழில்நுட்ப நிறுவனங்கள் பின்பற்றவில்லை என்றால் அவற்றிற்கு எதிராக அபராதம் விதிக்கப்படலாம் என அவுஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எனினும் இந்த தடை எவ்வாறு செயற்படும் என்பது குறித்தும்,அந்தரங்கத்தின் மீதான அதன் பாதிப்புகள் மற்றும்சமூக தொடர்பு குறித்து போதிய விளக்கமில்லை என விமர்சகர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
உலகில் பல நாடுகள் சமூக ஊடக பயன்பாடுகள் குறித்து தடைகளை விதித்துள்ள போதிலும் 16 வயதிற்கு உட்பட்டவர்களிற்கு தடை விதித்துள்ள முதல் நாடு அவுஸ்;திரேலியா என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஏற்கனவே உள்ள பயனாளர்களிற்கும் பெற்றோரின் சம்மதத்துடன் பயன்படுத்துவதற்கும் இந்த சட்டத்தில் கட்டுப்பாடுகள் இல்லாதததும் குறிப்பிடத்தக்கது.
மேலும் புதிய சட்டமூலம்காரணமாக எந்த தளங்கள் தடை செய்யப்படும் என்பது குறித்தும் எதனையும் குறிப்பிடவில்லை,இது குறித்து அவுஸ்திரேலியாவின் தொடர்பாடல் அமைச்சர் இலத்திரனியல் பாதுகாப்பு ஆணைக்குழுவின் ஆலோசனையை பெற்ற பின்னர் தீர்மானிப்பார்.
எனினும் ஸ்னாப்சட், டிக்டொக்,பேஸ்புக் இன்ஸ்டகிராம் டுவிட்டர் ஆகியவற்றை 16 வயதிற்கு உட்பட்டவர்கள் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கலாம் என அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த தடையை நடைமுறைப்படுத்துவதற்காக வயதை உறுதி செய்யும் தொழில்நுட்பத்தினை பயன்படுத்த வேண்டியிருக்கும் என அவுஸ்திரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதனை எதிர்வரும் மாதங்களில் பரீட்சித்து பார்க்கவுள்ளதாகவும் அவுஸ்திரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. (VKN)
No comments