2026 ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தின் கீழ் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ள அனைத்து வீட்டுத் திட்டங்களையும் உரிய காலத்திற்குள் நிறைவு செய்து மக்களிடம் ஒப்படைக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
அந்தத் திட்டங்களின் செயல்பாடுகளை ஒரே நிறுவனத்தின் கீழ் மேற்பார்வை செய்வதன் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
2026 வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டின் கீழ் செயல்படுத்தப்படும் "தமக்கென ஒரு இடம் - அழகான வாழ்க்கை" தேசிய வீட்டுத்திட்டம் உள்ளிட்ட ஏனைய வீட்டுத் திட்டங்கள் மற்றும் தற்போதைய செயல்பாடுகளை மீளாய்வு செய்வதற்காக தேசிய வீட்டமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரிகளுடன் இன்று (02) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.
2026 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டின் கீழ் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காக 10,200 மில்லியன் ரூபா செலவில் செயல்படுத்தப்படும் வீட்டுத் திட்டம் மற்றும் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த மக்களுக்காக 5,000 மில்லியன் ரூபா செலவில் செயல்படுத்தப்படும் வீட்டுத் திட்டங்களின் திட்டமிடல், செயல்பாடு மற்றும் நிறைவு செய்யவுள்ள காலக்கெடு தொடர்பில் ஜனாதிபதி இதன்போது அவதானம் செலுத்தினார்.
மேலும், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் கீழ் கடந்த ஆண்டுகளில் ஆரம்பிக்கப்பட்டு இன்னும் முடிக்கப்படாத வீட்டுத் திட்டங்களை விரைவாக முடிப்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது
வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் வைத்தியர் சுசில் ரணசிங்க, வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் பிரதி அமைச்சர் டி.பி. சரத், ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரஸல் அபோன்சு, வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் செயலாளர் பொறியியலாளர் எல். குமுது லால் போகஹவத்த, திறைசேரியின் வரவு செலவுத் திட்ட திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஜுட் நிலுக்சான் மற்றும் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் தலைவர் ஜே.கே. அரவிந்த ஸ்ரீ நாத் உட்பட தேசிய வீடமைப்பு அதிகார சபை மற்றும் நிதி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு


![[HeaderImage]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg09tTbuXgrmWfPes1PlGyjuO3CfMktHvNZLrSUmSTjzbrBuzTiTwoyOa7MLkpbvowmQGNQwKp5rg9YUy6WotDGHiD1pv-AHYCrJytyf7zkKLiilxe6cbVVkXeZrJk7A4Auzj7UgNLGPc2ehcngvQf-Gn60lZH6ALEzSxUYFl9w4TFDCO6g7OZTaAUmMtM/s16000/Anura-Kumara-Dissanayake.jpeg)




No comments