அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பதற்றம் சமீப நாட்களாக அதிகரித்து வருகிறது.
இந்த சூழலில், அமெரிக்கா தனது போர் கப்பல்கள் மற்றும் போர் விமானங்களை ஈரான் நோக்கி நிலைநிறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடைபெறலாம் என்ற அச்சம் நிலவுகிறது.
இந்நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக ஈரானின் உயர்மட்ட தலைவர் அயதுல்லா அலி கமேனி பூமிக்கடியில் உள்ள ஒரு பாதுகாப்பான சுரங்கத்தில் தங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
அமெரிக்கா தாக்குதல் நடத்தினால், கமேனியை குறிவைக்கலாம் என ஈரானின் உளவுத்துறை எச்சரித்ததை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கமேனி தங்கியுள்ளதாக கூறப்படும் இந்த சுரங்கம், ஈரானில் உள்ள மிக முக்கியமான பாதுகாப்பு வசதிகளில் ஒன்றாகும். எந்த வகையான தாக்குதலையும் தாங்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், சமீப காலத்தில் மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அவசர சூழலில் வெளியேற பல பூமிக்கடிப் பாதைகள் இதில் இருப்பதாகவும் தகவல்கள் மூலம் தெரியவருகிறது.
தற்போது கமேனியின் நேரடி அலுவலக பணிகளை அவரது மூன்றாவது மகன் மசூத் கவனித்து வருவதாகவும், முக்கிய நிர்வாக முடிவுகள் அவரின் மூலமாக எடுக்கப்படுவதாகவும், ஈரான் அதிகாரிகள் அவருடன் தொடர்பில் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக இஸ்ரேல் ஊடகங்கள் உட்பட ஈரானில் உள்ள எதிர்க்கட்சி ஆதரவு ஊடகங்களிலும் செய்திகளை வெளியிடப்பட்டுள்ளன.
அயதுல்லா அலி கமேனி பாதுகாப்பு காரணங்களுக்காக சுரங்கத்தில் தங்குவது இது முதல் முறை அல்ல. கடந்த ஆண்டு, ஈரான் அணுஆயுதம் தயாரிப்பதாக இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா குற்றம்சாட்டிய போது, அமெரிக்கா ஈரானின் சில அணுசக்தி நிலையங்களை தாக்கியது.
அச்சமயத்திலும் கமேனி பாதுகாப்பு சுரங்கத்தில் இருந்ததாக தகவல்கள் வெளியாகின. (Lankasri)




No comments