Page Nav

Pages

தலைப்புச் செய்திகள்

latest

மரண அறிவித்தல்

tamilsolution_ad_alt

தேசிய முதலிடம் பெற்ற சிங்கள மாணவனுக்கு அல்-அக்ஸா ஜும்ஆ பள்ளிவாசலில் சிறப்புக் கௌரவிப்பு

தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்ற சிங்கள மாணவனுக்கு கல்கமுவ, அங்கமுகம அல்-அக்ஸா ஜூம்ஆ பள்ளிவாசலில் சிறப்புக் கௌரவிப்பு நிகழ்வு

2026ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 193 புள்ளிகளைப் பெற்று இலங்கை அளவில் முதலிடம் பெற்ற எஹெட்டுவெவ ஆரம்பப் பாடசாலை மாணவன் தனோஜ் தீக்ஷண வீரசேகரவை கௌரவிக்கும் சிறப்பு நிகழ்வு, கல்கமுவ அங்கமுகம அல்-அக்ஸா ஜும்ஆ மஸ்ஜிதில் நேற்று நடைபெற்றது.

குருநாகல் மாவட்டம், மஹவ கல்வி வலயத்தைச் சேர்ந்த எஹெட்டுவெவ ஆரம்பப் பாடசாலை மாணவனான தனோஜ் தீக்ஷண, 193 புள்ளிகளைப் பெற்று நாடளவில் முதலிடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அல்-அக்ஸா ஜும்ஆ மஸ்ஜித் நிர்வாக சபைத் தலைவர் S.L.M. அன்வர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வு, ஜும்ஆ தொழுகையைத் தொடர்ந்து இடம்பெற்றது.

நிகழ்வை முன்னிட்டு அஸான் ஒலிப்பதற்கு முன்னர் வாகனப் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டு, மாணவன் தனோஜ் தீக்ஷண கல்கமுவ அங்கமுகம பிரதேசத்தைச் சுற்றி அழைத்துச் செல்லப்பட்டு அல்-அக்ஸா ஜும்ஆ மஸ்ஜிதிற்கு அழைத்து வரப்பட்டார்.

தொடர்ந்து நடைபெற்ற கௌரவிப்பு நிகழ்வில், மாணவனின் கல்விச் சாதனையைப் பாராட்டி அவருக்கு நினைவுச் சின்னம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் கல்கமுவ அங்கமுகம பிரதேசத்தைச் சேர்ந்த பொதுமக்கள், மதத் தலைவர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

தன்வீர் நிறுவனத்தின் பிரதிப் அதிபர் ரஸ்மி அப்துர் ரஹ்மான் நளீமி, உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஆர். எம். ரங்க சமீர ராஜபக்ஷ மற்றும் அம்பன்பொல பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பி. எம். சுஜீவ சமந்த குமார உள்ளிட்டோரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இதனுடன் இணைந்ததாக, அல்-அக்ஸா ஜும்ஆ மஸ்ஜிதில் சிங்கள மொழியில் ஜும்ஆ குத்பாவும் நடைபெற்றது.

தன்வீர் நிறுவனத்தின் பிரதிப் அதிபரும் மார்க்க அறிஞருமான ரஸ்மி அப்துர் ரஹ்மான் நளீமி குத்பாவை நிகழ்த்தினார்.

“கல்வியைக் கற்றுக்கொள்பவராக இருங்கள்; கற்றுக்கொடுப்பவராக இருங்கள்; கற்றுக்கொடுப்பவருக்கு உதவி செய்பவராக இருங்கள்” என்ற நபிமொழியை அடிப்படையாகக் கொண்டு, கல்வியின் முக்கியத்துவம், அறிவைப் பெறுவதன் அவசியம், பெற்ற அறிவை ஏனையோருடன் பகிர்ந்துகொள்வதன் பொறுப்பு மற்றும் கல்வி வளர்ச்சியில் சமூகத்தின் பங்களிப்பு குறித்து அவர் எடுத்துரைத்தார்.

அத்துடன், பல்வேறு இனங்களும் மதங்களும் இணைந்து வாழும் இலங்கை சமூகத்தில் இன நல்லிணக்கத்தையும் சமூக ஒற்றுமையையும் மேலும் வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.

தனோஜ் தீக்ஷண சிறுவயதிலேயே தனது தாயை இழந்த நிலையில், தனது தந்தையின் அன்பு, அரவணைப்பு மற்றும் வழிகாட்டலின் கீழ் வளர்ந்துள்ளார்.

வாழ்க்கையின் ஆரம்பத்திலேயே தாயின் இழப்பை எதிர்கொண்ட போதிலும், கல்வியில் தனது திறமையை வெளிப்படுத்தி இலங்கை அளவில் முதலிடம் பெற்றிருப்பது அவரது கல்விப் பயணத்தில் குறிப்பிடத்தக்க சாதனையாக அமைந்துள்ளது.

இந்த வெற்றி தனோஜ் தீக்ஷணவின் தனிப்பட்ட சாதனையாக மட்டுமன்றி, அவரது குடும்பத்திற்கும், எஹெட்டுவெவ ஆரம்பப் பாடசாலைக்கும், அவரை வழிநடத்திய ஆசிரியர்களுக்கும், கல்கமுவ அங்கமுகம பிரதேசத்திற்கும் பெருமை சேர்த்துள்ளது.

ஒரு மாணவனின் கல்விச் சாதனையை சமூக மட்டத்தில் கௌரவித்ததுடன், கல்வியின் முக்கியத்துவம், அறிவைப் பகிர்ந்துகொள்ளும் பொறுப்பு மற்றும் இன நல்லிணக்கத்தின் அவசியம் ஆகியவற்றையும் ஒரே நிகழ்வில் வலியுறுத்தியமை இந்நிகழ்வின் சிறப்பம்சமாக அமைந்தது.

 



No comments