Page Nav

Pages

தலைப்புச் செய்திகள்

latest

மரண அறிவித்தல்

tamilsolution_ad_alt

பாராளுமன்றத்தில் புதிய மொழிபெயர்ப்புப் பிரிவு ஆரம்பம்




இலங்கைப் பாராளுமன்ற வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லைப் பதித்து பாராளுமன்றத்தின் புதிய மொழிபெயர்ப்புப் பிரிவு கடந்த அக்டோபர் 05ஆம் திகதி உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.


பாராளுமன்றத்தின் மொழிபெயர்ப்புப் பணிகளை மேலும் திறம்பட மேற்கொள்வதற்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுக்கும் நோக்கத்துடன் தாபிக்கப்பட்ட இந்தப் பிரிவு, பாராளுமன்றச் செயலாளர் நாயகம் திருமதி குஷானி ரோஹணதீர அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.


இங்கு கருத்துத் தெரிவித்த பாராளுமன்றச் செயலாளர் நாயகம் திருமதி குஷானி ரோஹணதீர அவர்கள், ஓர் அலுவலகத்தின் முன்னேற்றத்திற்குச் சரியான தலைமைத்துவமும், கூட்டு ஒற்றுமையும் மிக அத்தியாவசியமானவை எனக் குறிப்பிட்டார். பாராளுமன்றச் செயலகம் எப்போதும் அனைத்துப் பணியாளர்களினதும் வாழ்க்கைத்தரம், தொழில்சார் ஸ்திரத்தன்மை மற்றும் அபிவிருத்தி என்பவற்றுக்காக முன்னிற்கும் எனக் கூறிய அவர், பாராளுமன்றம் கொண்டுள்ள மிக மதிப்புமிக்க சொத்து அதன் ஊழியர்களே என்பதையும் சுட்டிக்காட்டினார். மேலும், இந்தப் புதிய பிரிவு மொழிபெயர்ப்பாளர்களுக்காகத் திறக்கப்பட்ட போதிலும், அதற்காக தீவிரமாகவும் முன்நின்றும் செயற்படுவது உரைபெயர்ப்பாளர்கள் என்பதைக் கண்டு தாம் பெரிதும் மகிழ்ச்சியடைவதாகவும் செயலாளர் நாயகம் தெரிவித்தார்.



இந்நிகழ்வில் பாராளுமன்றத்தின் உதவிச் செயலாளர் நாயகம் திரு. ஹன்ஸ அபேரத்ன, சட்டவாக்கச் சேவைகள் பணிப்பாளர் திரு. ஜயலத் பெரேரா, திணைக்களத் தலைவர்கள் மற்றும் பாராளுமன்றத்தின் ஏனைய சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.


இங்கு வரவேற்புரையாற்றிய சட்டவாக்கச் சேவைகள் பணிப்பாளர் திரு. ஜயலத் பெரேரா, உரைபெயர்ப்புச் சேவைக்கு மேலதிகமாக உரைபெயர்ப்பாளர் அலுவலகத்தினால் பெருமளவிலான மொழிபெயர்ப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார். அவ்வாறிருந்தும், மொழிபெயர்ப்புகள் தாமதமடைவதாகப் பாராளுமன்றத்தின் எந்தவொரு அலுவலகத்திலிருந்தும் இதுவரை எவ்வித முறைப்பாடுகளும் கிடைக்கவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.




பாராளுமன்ற மொழிபெயர்ப்புப் பணிகளுக்கெனத் தனியான மொழிபெயர்ப்புப் பிரிவொன்றை தாபிக்கும் யோசனை பிரதம பாராளுமன்ற உரைபெயர்ப்பாளர் திரு சீ. ஜே. கருணாரத்ன அவர்களால் பாராளுமன்றச் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர அவர்களிடம் முன்வைக்கப்பட்டிருந்ததுடன், செயலாளர் நாயகம் மற்றும் உதவிச் செயலாளர் நாயகம் ஆகியோரின் பூரண ஒத்துழைப்புடன் அது நிறைவேற்றப்பட்டது. இந்நிகழ்வில் உரையாற்றிய பிரதம பாராளுமன்ற உரைபெயர்ப்பாளர் கருணாரத்ன, பாராளுமன்ற உரைபெயர்ப்பாளர் அலுவலகத்தின் பௌதீக வசதிகளை மேம்படுத்துவதற்கும், உரைபெயர்ப்பின் தரத்தை உயர்த்துவதற்கான பயிற்சி வாய்ப்புகளை வழங்குவதற்கும் செயலாளர் நாயகமும் உதவிச் செயலாளர் நாயகமும் வழங்கி வரும் ஒத்துழைப்பு மிகவும் பாராட்டுக்குரியது எனத் தெரிவித்தார்.


இந்தப் பிரிவை தாபிப்பதன் மூலம் பாராளுமன்ற மொழிபெயர்ப்பாளர்களுக்குச் சிறந்ததொரு தொழில்சார் சூழலை உருவாக்குவதும், பாராளுமன்றத்தின் மொழிபெயர்ப்புப் பணிகளை மேலும் பலப்படுத்துவதும் நோக்கமாகும்.



இதன்போது மொழிபெயர்ப்பாளர் கீதம் (Translators’ Anthem) மற்றும் உரைபெயர்ப்பாளர்களுக்கான தொழில்சார் ஒழுக்கநெறிக் கோவை என்பன பாராளுமன்றச் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர மற்றும் உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ஸ அபேரத்ன ஆகியோரிடம் கையளிக்கப்பட்டன. அத்துடன், பாராளுமன்றச் சேவையில் புதிதாக இணைந்து கொண்ட உரைபெயர்ப்பாளர்கள் மற்றும் மொழிபெயர்ப்பாளர்களுக்காக உரைபெயர்ப்பாளர் அலுவலகத்தினால் நடாத்தப்பட்ட பயிலமர்வை வெற்றிகரமாகப் பூர்த்தி செய்தவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.


மொழிபெயர்ப்புப் பிரிவை தாபித்தமைக்காக செயலாளர் நாயகம் மற்றும் உதவிச் செயலாளர் நாயகம் ஆகியோருக்கு நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டன.


அதேநேரம், உலகளவில் செப்டம்பர் 30ஆம் திகதி கொண்டாடப்படும் சர்வதேச மொழிபெயர்ப்பு தினக் கொண்டாட்டமும் இதற்குச் சமாந்தரமாக பாராளுமன்ற உதவிச் செயலாளர் நாயகம் திரு. ஹன்ஸ அபேரத்ன அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இம்முறை சர்வதேச மொழிபெயர்ப்புத் தினம் "பல்மொழித் தன்மையும் மொழி உரிமைகளும்" (Linguistic Diversity and Language Rights) எனும் தொனிப்பொருளின் கீழ் "புரிந்துகொள்ளப்படக் கூடிய ஆற்றல்" (The Power of Being Understood) எனும் உப தொனிப்பொருளுடன் கொண்டாடப்பட்டது.


வெவ்வேறு மொழிகளுக்கும் கலாசாரங்களுக்கும் இடையே தொடர்பாடலையும் புரிந்துணர்வையும் கட்டியெழுப்புவதில் உரைபெயர்ப்பும் மொழிபெயர்ப்பும் ஆற்றிவரும் முக்கிய பங்களிப்பு இங்கு வலியுறுத்தப்பட்டது.


முன்னாள் பிரதிப் பிரதம பாராளுமன்ற உரைபெயர்ப்பாளர்களான திரு.கே.எம். கிறிஸ்தோபர் மற்றும் என். சீர்பாதம் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டதுடன், பாராளுமன்ற உரைபெயர்ப்புச் சேவைக்காக அவர்கள் ஆற்றிய அர்ப்பணிப்பான சேவைகளும் இதன்போது பாராட்டி கௌரவிக்கப்பட்டன.


பாராளுமன்றத்தின் முதலாவது மொழிபெயர்ப்புப் பிரிவைத் தாபித்தல் மற்றும் 2026 சர்வதேச மொழிபெயர்ப்பு தினத்தைக் கொண்டாடுதல் ஆகிய இரு நிகழ்வுகளையும் குறித்து நின்ற இந்நிகழ்வு, பாராளுமன்ற உரைபெயர்ப்பு மற்றும் மொழிபெயர்ப்புச் சேவைகளை மேலும் தொழில்சார்ந்த மற்றும் வினைத்திறனான சேவையாக மாற்றுவதற்கான பயணத்தில் ஒரு முக்கிய தடமாக அமைந்தது.


இந்நிகழ்வில் பிரதிப் பிரதம பாராளுமன்ற உரைபெயர்ப்பாளர்களான திரு.ஏ. சரவணபவானந்தன், சமிலா நிஸ்ஸங்க, ஜீ.எஃப்.பீ. சுரேஷ்வரன் உள்ளிட்ட பெருந்திரளான உரைபெயர்ப்பு மற்றும் மொழிபெயர்ப்பு அலுவலர்கள் கலந்துகொண்டனர். (News.lk)


No comments