உயர் நீதிமன்றத்தினால் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட தீர்ப்பிற்கு எதிராக அரசாங்கத்தால் செயற்பட முடியாது என அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இன்று (20) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்க அரசாங்கத்தால் ஏன் முடியாது என இச்சந்திப்பின் போது அமைச்சரிடம் வினவப்பட்டது.
அதற்கு பதிலளித்த அமைச்சர், சட்டத்தின் ஆட்சியையும் ஆதிக்கத்தையும் சரியாக நடைமுறைப்படுத்துவதற்காகவே தற்போதைய அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்தது என்பதால், உயர் நீதிமன்ற உத்தரவுக்குக் கீழ்ப்படியாமல் நடந்து கொள்ள அரசாங்கத்தால் முடியாது எனக் கூறினார்.
இது குறித்து மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ,
"வெளியில் இருந்த ஒரு தேரரை அரசாங்கம் சென்று எங்கேனும் சிறையிலடைக்கவில்லை. இது நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பு... தவறு இழைக்கப்பட்டு உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை செய்யப்பட்டு அதற்கு உயர் நீதிமன்றத்தால் தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னர், எல்லா இடங்களிலும் குழுக்கள் ஒன்றிணைந்து கோரிக்கை விடுக்கத் தொடங்கினால், உயர் நீதிமன்ற உத்தரவுக்குக் கீழ்ப்படியாமல் நடந்து கொள்ளுமாறு ஒரு அரசாங்கத்திடம் கூறினால், அரசாங்கத்தால் அப்படிச் செய்ய முடியாது. சட்டத்தின் ஆட்சியையும் ஆதிக்கத்தையும் சரியாக நடைமுறைப்படுத்துவதற்காகவே இந்த அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்தது. தராதரம், பதவி அல்லது அதிகாரம் ஆகியவற்றின் முன்னிலையில் சட்டத்தை வளைக்காமல் அனைவருக்கும் சட்டத்தையும் நீதியையும் சமமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதையே அரசாங்கத்திற்கு வாக்களிக்காத மக்கள் கூட எதிர்பார்க்கின்றனர். எனவே அதற்கு அமைய நடைமுறையிலுள்ள சட்டத்தின் படியும் உயர் நீதிமன்ற உத்தரவுகளின் படியும் செயல்படுவோம்" என்றார். (AdaDerana)

![[HeaderImage]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEihr_U0vyXAtzX3M-ErL8-VX4hFIx46iSIoUmdN7Z7oesRaNjato8n-MJyR4kqYAAH546SEQhmH-UJ_cWlRJfrgGHwho9G8Ou6VivIxVXqnJyMHqvDJFtYTafiyNiRV_RZCBRPb7MzPw3NGaPY791uP2PKkdR6yjqVlVMxLkbyWCgxYOefIl1-IfCe3mDY/s1600/Untitled-60.jpg)



No comments