(மட்டக்களப்பு நிருபர்)
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் 350 ஏக்கர் நிலப்பரப்பில் மகாவலி திட்டத்தின் ஊடாக இடம்பெறவுள்ள சூரிய மின்சக்தி நிலையம் அமைக்கப்படவுள்ள காணி தொடர்பாக ஆராயும் விசேட கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.கலாமதி பத்மராஜா தலைமையில் மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவரும் இராஜாங்க அமைச்சருமாகிய சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் (27) திகதி இடம் பெற்றது.
இந்த நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திருமதி.நவரூபரஞ்ஜினி முகுந்தன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.சசிகலா புண்னியமூர்த்தி, கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் இணைப்புச் செயலாளர் ஆ.தேவராஜ், மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவரின் பிரத்தியேக செயலாளர் த.தஜீவரன், பிரதி திட்டமிடல் பணிப்பாளர்கள், விவசாய மற்றும் கமநல சேவைகள் திணைக்கள அதிகாரிகள், வனவள திணைக்கள அதிகாரிகள், சிரேஸ்ட நில அளவை அத்தியட்சகர் மற்றும் கிரான் பிரதேச செயலாளர், காணி உத்தியோகத்தர் உள்ளிட்ட துறை சார்ந்த உத்தியோகத்தர்கள் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்ட நிகழ்வில் நிகழ்நிலை ஊடாக மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையின் உயரதிகாரிகளும் கலந்துகொண்டு குறித்த விடையம் தொடர்பாக விரிவாக கலந்துரையாடினர்.
குறித்த திட்டம் மாவட்டத்தின் அபிவிருத்தியில் பங்காற்றுகின்ற போதிலும் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த உத்தேசித்துள்ள காணியில் விவசாயம் மேற்கொள்ளும் வயல் காணிகளும் உள்ளடங்குவதாக இராஜாங்க அமைச்சர் சிவ.சந்திரகாந்தனிடம் விவசாயிகளினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாகவே குறித்த விடயம் தொடர்பாக கலந்தாலோசிக்கும் கூட்டம் இடம்பெற்றதுடன், ஒரு வார காலத்திற்குள் துறைசார் அதிகாரிகளுடன் கள விஜயம் ஒன்றினை மேற்கொண்டு குறித்த திட்டத்தினை அமுல்படுத்துவது தொடர்பான திட்டத்தினை முன்னெடுக்குமாறு இராஜாங்க அமைச்சர் சிவ.சந்திரகாந்தன் இதன்போது அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்
No comments