மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் சமூக ஊடகப் பாவனைகள் அதிகரித்து வருகின்ற நிலைமையில் அதனை சரியான முறையிலும், பாதுகாப்பாகவும் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் வேலைத்திட்டமொன்று மட்டக்களப்பில் இயங்கிவரும் LIFT தன்னார்வத் தொண்டு நிறுவனத்தினால் மேற்கொள்ளப்படுகின்றது.
இதற்காக மட்டக்களப்பிலுள்ள ஊடகவியலாளர்களுக்கு விசேட பயிற்சிகள் வழங்கப்பட்டு அவர்களிலிருந்து தெரிவு செய்யப்பட்டவர்களை வளவாளர்களாகக் கொண்டு விழிப்புணர்வுக் கருத்தரங்குகள் மேற்கொள்ளப்படுகின்றன.
அதன் ஒரு கட்டமாக மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு தேசிய இளைஞர் சேவைகள் மன்றம், மஞ்சந்தொடுவாய் தொழில்நுட்பக்கல்லூரி, ஆரையம்பதி மகா வித்தியாலயம் ஆகியவற்றில் இரண்டு நாட்களைக் கொண்ட கருத்தரங்குகள் இடம்பெற்றன.
கருத்து வெளியிடும் சுதந்திரம் மற்றும் அதில் காணப்படும் சட்ட வரம்புகள், ஊடக தர்மம், ஊடக நெறிமுறைகள் போன்ற பல்வேறு விடயங்களில் இந்த விழிப்புணர்வுக் கருத்தரங்குகள் நடாத்தப்படுகின்றன.
இதற்கான வளவாளர்களாக ஊடகவியலாளர்களும் சமூக செயற்பாட்டாளர்களுமான ருக்சிகா மயூரன், பேரின்பராஜா சபேஷ், மு.பாரிஸ், உதயகுமார் உதயகாந்த், குழந்தைவடிவேல் ஜெயச்சந்திரிகா, சஜீத் அஹமட் ஆகிய ஊடகவியலாளர்கள் செயற்பட்டதோடு LIFT நிறுவன உத்தியோகத்தர்களான சுதன், கண்ணன், விதுஷா ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இத்திட்டத்திற்கான நிதியுதவியை HELVETAS நிறுவனம் வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த மூன்று செயலமர்வுகளிலும் மொத்தமாக 92 மாணவர்கள் பயனடைந்துள்ளதுடன், இத்திட்டத்தின் மூலமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் மொத்தமாக 900 மாணவர்கள் பயனடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments