நாட்டிலுள்ள அனைத்துப் பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் கீழுள்ள நிறுவனங்கள் என்பனவற்றின் சொத்துகள் உள்ளிட்ட விபரங்களை வழங்குமாறு புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளரைக் கோரியுள்ளார்.
பள்ளிவாசல்கள் மற்றும் நிறுவனங்களின் அசையும், அசையா சொத்துக்கள், உள்ளிட்ட விபரங்களை தாமதமின்றி வழங்குமாறு கோரப்பட்டுள்ளது.
இதேவேளை பள்ளிவாசல்கள் மாத்திரமல்ல நாட்டிலுள்ள அனைத்து மதஸ்தலங்களின் சொத்துகள் மற்றும் தகவல்களைப் பெற்றுக் கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளதெனவும் மகாநாயக்கர்கள் மற்றும் ஏனைய மதத்தலைவர்களின் ஒத்துழைப்புடன் இந் நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.
பதிவு செய்யப்பட்டவை மற்றும் பதிவு செய்யப்படாதவை என்ற வகையில் இரு வேறு பிரிவுகளில் தகவல்கள் சேகரிக்கப்பட்டு தற்போது அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பில் தற்போது அரைவாசி பணி பூர்த்தியாகியுள்ளது என பணிப்பாளர் இஸட் ஏ.ஏம்.பைசல் விடிவெள்ளி பத்திரிகைக்கு தெரிவித்திருந்தார்.
ஆரம்பக்கட்டமாக பள்ளிவாசல்கள், அதன் சொத்துகள் தொடர்பான விபரங்கள் சேகரிக்கப்பட்டு அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. அடுத்த கட்டமாக திணைக்களத்தின் கீழுள்ள ஏனைய நிறுவனங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
பள்ளிவாசல்களின் சொத்துகள் தொடர்பான விபரங்களைத் திரட்டுவதற்கு வக்பு சபை பாரிய ஒத்துழைப்புகளை வழங்கி வருவதாகவும் இதனால் இந்தப்பணி இலகுவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த அவர் வக்பு சபைக்கு தனது நன்றிகளை சமர்ப்பிப்பதாகவும் கூறினார்.
(ஏ.ஆர்.ஏ.பரீல்)
No comments