Page Nav

Pages

தலைப்புச் செய்திகள்

latest
tamilsolution_ad_alt

12 வயதுச் சிறுமி சடலமாக மீட்பு - யாழில் சம்பவம்

யாழ்ப்பாணம் – திருநெல்வேலிப் பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் 12 வயது சிறுமி சடலமாகவும், மற்றொரு பெண் உயிராபத்தான நிலையிலும் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இச் சம்பவம் நேற்று (12) முற்பகல் இடம்பெற்றுள்ளது.

குறித்த சிறுமி தனது பாட்டியுடன் இங்கு வந்ததாகவும் மூன்று நாட்களுக்கு முன்னரே சிறுமி இறந்து விட்டார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 9ஆம் திகதி முதல் அவர்கள் திருநெல்வேலியிலுள்ள தனியார் விடுதியில் இவர்கள் தங்கியிருந்துள்ளனர். 12 வயதான சிறுமிக்கு மனநல பிரச்சினை உள்ளதாகவும், அதற்காக யாழ். தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற வந்ததாகவும் குறிப்பிட்டே, விடுதியில் அறையெடுத்ததாக விடுதி முகாமையாளர் தெரிவித்தார்.


மறுநாள் அந்த பெண் மாத்திரம் ஒருமுறை வெளியில் சென்று வந்துள்ளார். அதன் பின்னர் அவர்கள் அறையை விட்டு வெளியில் வரவில்லை. நேற்று பகல் அறையிலிருந்து துர்நாற்றம் வீசியதையடுத்து, விடுதி ஊழியர்கள் அறையை தட்டியபோது பதிலில்லை. இதையடுத்து, ஜன்னல் பகுதியை உடைத்து உள்ளே பார்த்தபோது, கட்டிலில் இருவரும் அசைவற்று படுத்திருந்ததோடு, கடுமையான துர்நாற்றமும் வீசியுள்ளது. இருவரும் உயிரிழந்து விட்டார்கள் என கருதிய விடுதி ஊழியர்கள் கோப்பாய் பொலிஸாருக்கு அறிவித்தனர்.


கோப்பாய் பொலிஸார் அறை கதவை உடைத்து உள்ளே நுழைந்து பார்த்தபோது, சிறுமியின் உடல் இலேசாக அழுகியிருந்தது. அடுத்த கட்டிலில் படுத்திருந்த பெண்ணின் உடலில் இலேசான அசைவு தென்பட்டது. உடனடியாக அவசர நோயாளர் காவு வண்டி வரவழைக்கப்பட்டு, அவர் அதில் ஏற்றப்பட்டார். அப்போது, “என்னை எங்கு கொண்டு செல்கிறீர்கள்?“ என அவர் கேட்டதோடு, பின்னர் எந்தப் பேச்சுமில்லை.


குறித்த பெண் தற்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் பொலிஸ் பாதுகாப்பில் சிகிச்சை பெற்று வருகிறார்.


இச்சம்பவம் தொடர்பில் குறித்த அந்த அறையில் காணப்பட்ட ஒரு தற்கொலை குறிப்பில் இருவருக்கும் மனநோய் ஏற்பட்டுள்ளதால் தற்கொலை செய்வதாகவும், அதில் சிறுமியின் பெயர் கேமா என்று குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


எனவே, சிறுமியுடன் வந்தவர் தாயாரா, பாட்டியா என்பதில் குழப்பம் நிலவியது. எனினும், அவர் தாயாராக இருக்கலாம் என தற்போது தகவல் வெளியாகியுள்ள நிலையில் அவர் இரண்டு திருமணம் செய்தவர் என்றும், உறவுச்சிக்கல்களாலும் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.


திருகோணமலை, கடற்கரையை சேர்ந்த 53 வயதுடைய நாகபூசணி சிவநாதன் என்பவரே உயிராபத்தான நிலையில் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். (TKN)


No comments