Page Nav

Pages

தலைப்புச் செய்திகள்

latest
tamilsolution_ad_alt

வயது பத்தொன்பதே ஆன அனீப் விபத்தொன்றில் மரணம்

இரண்டு இளைஞர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளொன்று வீதியோர மின் கம்பம் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளானதில் பின் ஆசனத்திலிருந்து பயணித்த 19 வயது இளைஞர் ஒருவர் கடும் காயங்களுக்குள்ளாகி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

வாசலகோட்டை – மாத்தளை மாதிப்பொளை வீதியில் யடிவெஹர பிரதேசத்தில் நேற்று (12) மாலை 5.00 மணியளவில் இவ்விபத்துச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.

பால்ய நண்பர்களான குறித்த இளைஞர்கள் இருவரும் கலேவெல நகரிலிருந்து மாதிப்பொளை – ஜானக்க கமவிலுள்ள தமது வீடு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்ததாகவும், வாசலகோட்டைக்குச் சமீபமாக வீதி ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போக்குவரத்துப் பிரிவு பொலிஸார் இருவரை கண்டு மிரண்ட நிலையில் கடும் வேகத்தில் தமது மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றதாகவும் குறுக்குப் பாதையொன்றினூடாக அதே வேகத்தில் மோட்டார் சைக்கிளைத் திருப்புவதற்கு முயற்சித்தபோது மோட்டார் சைக்கிளின் பின் ஆசனத்தில் அமர்ந்து பயணித்த வாலிபரின் தலை வீதியோர மின் கம்பத்துடன் மோதுண்டு தலைப் பாகத்தில் பலத்த காயம் ஏற்பட்டதைத் தொடர்ந்து மாதிப்பொளை வைத்தியசாலையிலிருந்து மாத்தளை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லும் வழியில் மரணம் சம்பவித்திருப்பதாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பக் கட்ட விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது.


விபத்திற்குள்ளான மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்றதாகக் கூறப்படும் 19 வயதான ஹுஸைன் பைனாஸ் என்பவர் தலைக் கவசம் அணிந்திருந்த போதிலும் அவரிடம் சாரதி அனுமதிப் பத்திரம் இருக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுவதுடன் விபத்தில் பலியான 19 வயதான அலி ஜின்னா அனீப் வாகனங்கள் செலுத்துவதற்கான சாரதி அனுமதிப் பத்திரம் வைத்திருந்த போதிலும் அவர் தலைக் கவசம் ( ஹெல்மட்) அணிந்திருக்கவில்லை எனப் பொலிஸார் தெரிவித்தனர்.


சம்பவத்தின் போது காயமடைந்த இருவரையும் மாதிப்பொளை வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு குறித்த போக்குவரத்துப் பிரிவு பொலிஸார் இருவரும் பொது மக்களுடன் மிகவும் ஒத்தாசையாக இருந்ததாகத் தெரிவித்த பிரதேசவாசிகள் மோட்டார் சைக்கிளில் தலைக்கவசம் அணியாமல் பயணித்துக் கொண்டிருந்தவர்களை நிறுத்துமாறு பொலிஸார் சமிக்ஞை செய்திருக்கலாம் எனவும், அதனை மீறிப் பயணித்த மோட்டார் சைக்கிளை பொலிஸார் பின் தொடர்ந்ததை அடுத்து வாலிபர்கள் வெருண்டோடியிருக்கலாம் எனவும் சந்தேகம் தெரிவித்து வருகின்றனர்.


சம்பவத்தில் உயிரிழந்த அலி ஜின்னா அனீப் இவரது பெற்றோருக்கு ஒரே பிள்ளையாவார். மத்திய கிழக்கு நாடொன்றில் ( குவைத் )பணிப் பெண்ணாகப் பணிபுரியும் இவரது தாய் பரீஹா உம்மா இச் சம்பவம் இடம் பெறுவதற்கு முதல் நாள் (11) இரண்டு மாதகால விடுமுறையின் பின்னர் மீண்டும் தனது பணியின் பொருட்டு குவைத் நாட்டுக்கு திரும்பி இருந்தமை குறிப்பிடத்தக்கது .

தம்புள்ள தினகரன் நிருபர்


No comments