இந்தியா - இலங்கை அணிகள் மோதிய கிரிக்கெட் போட்டியில் நாணய சுழற்சியில் ஏமாற்று வேலை நடந்து இருப்பதாக புகார் தெரிவித்துள்ளார் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச.
அவர் இலங்கை அணியின் ஜாம்பவான் கிரிக்கெட் வீரர் ஒருவர் மீதும், இந்தியா மீதும் குற்றச்சாட்டுக்களை முன் வைத்துள்ளார். இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழு நியமனங்களிலும் கூட இந்தியாவின் தலையீடு உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
2023 உலகக்கோப்பை தொடரில் இந்தியா - இலங்கை அணிகள் மோதிய லீக் போட்டி மும்பையில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை கேப்டன் குசல் மென்டிஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
ஆனால், அந்த ஆடுகளத்தில் அன்றைய தினம் பிட்ச்சின் தன்மை முதலில் பேட்டிங் செய்பவர்களுக்கு சாதகமாக இருந்தது. போட்டிக்கு முன்பு பிட்ச்சை பார்த்து நேரலையில் அறிக்கை அளித்த முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் போன்றோர் கூட அதையே கூறி இருந்தனர்.
ஆனால், குசல் மென்டிஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது வியப்பை ஏற்படுத்தியது. அதன் பின் இந்தியா முதலில் பேட்டிங் செய்து 357 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய இலங்கை அணி வெறும் 55 ரன்களுக்கு ஆல் - அவுட் ஆனது. 302 ரன்கள் வித்தியாசத்தில் உலகக்கோப்பை வரலாற்றிலேயே மிக மோசமான தோல்வியை தழுவியது. அதன் பின் இலங்கை அணி மீது அவர்கள் நாட்டில் பலத்த விமர்சனம் எழுந்தது. அடுத்த சில தினங்களில் இலங்கை கிரிக்கெட் அமைப்பை கலைத்து உத்தரவிட்டார் நாட்டின் விளையாட்டுத்துறை அமைச்சர்.
ஆனால், அது செல்லாது என நீதிமன்றம் அந்த உத்தரவுக்கு தடை விதித்தது. இந்த களேபரங்களை அடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, மகேல ஜெயவர்தனே மீதும், இந்தியா மீதும் கடும் குற்றச்சாட்டுக்களை முன் வைத்துள்ளார். இலங்கை அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் மகேல ஜெயவர்தனே தற்போது இலங்கை அணியின் ஆலோசகராக அணியுடன் பயணித்து வருகிறார்.
"இந்தியாவுக்கு எதிரான போட்டியில் முதலில் டாஸ் வென்றால், பந்துவீச்சை தேர்வு செய்யும் படி மகேல ஜெயவர்தனே தான் கூறி இருக்கிறார். இந்திய அணியின் கேப்டன் கூட ஏன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார் என அந்த முடிவுக்கு அதிர்ச்சி அடைந்தார். அவர்களும் அந்த பிட்ச்சில் முதலில் பேட்டிங் செய்யவே விரும்புவதாக தெரிவித்தார்." என்றார் விமல் வீரவன்சா.
மேலும், "சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இந்தியாவால் ஆளப்படுகிறது. இலங்கை தேர்வுக் குழுவை நியமித்ததும் இந்தியா தான். உலகக்கோப்பை தொடரில் எந்த தொடக்க விழாவும் நடத்தப்படவில்லை. ஆனால், இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கு மட்டும் அவர்கள் விழா நடத்துகிறார்கள். கிரிக்கெட்டில் பெரிதாக ஏதோ நடக்கிறது. குசல் மென்டிஸ்-க்கு, மகிளா ஏன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்யுமாறு கூறினார் என்பதை நாம் கண்டுபிடிக்க வேண்டும்" என விமல் வீரவன்ச கூறி இருக்கிறார்.
இலங்கை கிரிக்கெட் அணி இந்த உலகக்கோப்பை தொடரில் ஏற்கனவே பல பின்னடைவுகள், சர்ச்சைகளை சந்தித்து வருகிறது. அந்த அணியின் பாதி வீரர்கள் காயத்தால் உலகக்கோப்பை தொடருக்கு முன்பும், பின்பும் வெளியேறி இருக்கிறார்கள். கேப்டனாக இருந்த ஷனக காயத்தால் விலகியதால் குசல் மென்டிஸ் பாதி தொடரில் கேப்டன் ஆக்கப்பட்டார்.
அடுத்து இந்தியாவுக்கு எதிரான மோசமான தோல்வி அரங்கேறியது. அதன் பின், வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் ஏஞ்சலோ மேத்யூஸ் டைம் அவுட் செய்யப்பட்டு அது ஒரு பெரிய சர்ச்சை ஆனது. இந்த நிலையில், விமல் வீரவன்ச புதிய பிரச்சனையை கிளப்பி இருக்கிறார்.
No comments