இந்த வருடத்தில் 36,000 ஏக்கரில் புதிதாக தென்னை பயிரிடத் திட்டமிட்டுள்ளதாகவும் அவற்றில் 16,000 ஏக்கர் வடக்கு தென்னை முக்கோண வலயத்திலும் எஞ்சிய 20,000 ஏக்கர் ஏனைய பகுதிகளிலும் இடம்பெறும் என பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் கௌரவ அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்தார்.
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு அமைச்சரின் தலைமையில் 2025.03.05 ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் கௌரவ பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்களும் இதில் கலந்துகொண்டார்.
தென்னை பயிரிச்செய்கையை மேம்படுத்தும் நோக்கில் இவ்வாண்டில் 2.5 மில்லியன் தேங்காய் விதைகள் உற்பத்தி செய்யப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். மேலும், ரஷ்யாவிலிருந்து இலவசமாகப் பெறப்பட்ட 55,000 மெட்ரிக் தொன் MOP உரத்தில், 27,500 மெட்ரிக் தொன் தற்போது தென்னை பயிற்செய்கைக்காக 56,000 மெட்ரிக் தொன் கலப்பு உரத்தைத் தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்படுவதாகவும், இதன் மூலம் ஐந்து ஏக்கருக்கும் குறைவான தென்னந்தோட்ட உரிமையாளர்களுக்கு உர மானியம் வழங்குவதாகவும் அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்தார். அதற்கமைய, அந்த கலப்பு உரம், சந்தை விலை அண்ணளவாக 9,500 ரூபாய் கொண்ட 50 கிலோ கிராம் உர மூட்டையை 4,000 ரூபாய் மானிய விலையில் இந்த மாத இறுதியில் நாடு பூராகவும் உள்ள தென்னைப் பயிர்ச்செய்கையாளர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.
இந்திய உதவித் திட்டத்தின் கீழுள்ள 10,000 வீட்டுத்திட்டத்தில் இவ்வாண்டில் 4,700 தோட்டப்புற வீடுகளை நிர்மாணிக்க எதிர்பார்ப்பதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது. இதற்கு முன்னர் வீட்டுப் பயனாளிகளைத் தேர்ந்தெடுக்கும் போது அரசியல் தொடர்புகளின் அடிப்படையில் இடம்பெற்றுள்ளதாக அறிக்கையிடப்பட்டிருந்தாலும், இம்முறை எந்தவிதக் கட்சி, நிறப் பாகுபாடும் இன்றி முன்னுரிமை அடிப்படையில் மிகவும் வெளிப்படைத்தன்மையுடன் அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் அமைச்சர் வலியுறுத்தினார். மண்சரிவு எச்சரிக்கை உள்ள பகுதிகளில் அமைந்துள்ள வீடுகளில் வசிக்கும் மக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். அத்துடன், தோட்ட வீடுகளை மேம்படுத்துவதன் மூலம் உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கு உள்நாட்டு நிதியங்களிலிருந்து 1,300 மில்லியன் ரூபாய் செலவிட எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
அமைச்சின் பணிகள் மற்றும் எதிர்காலத திட்டங்களை குழுவின் முன் சமர்ப்பித்த அமைச்சின் செயலாளர் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவிக்கையில், பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் கீழ் உள்ள பெருந்தோட்ட நிறுவனங்களில் பயன்படுத்தப்படாத சுமார் 30,000 ஹெக்டெயர் நிலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவற்றை முதலீட்டாளர்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
அத்துடன், 2024 ஆம் ஆண்டில் இந்நாட்டின் மொத்த தேயிலை உற்பத்தி சுமார் 262 மில்லியன் கிலோ கிராம் எனவும், 2025 இல் அந்த இலக்கு 275 மில்லியன் கிலோ கிராம் தேயிலை எனவும் செயலாளர் தெரிவித்தார். அத்துடன், உலகில் முதல் இறப்பர் ஆராய்ச்சி நிலையத்தை ஆரம்பித்த இந்நாட்டின் இறப்பர் ஏற்றுமதியில் குறைவு ஏற்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டிய அவர் 2025 ஆம் ஆண்டில் அந்த இலக்கு 78 மில்லியன் கிலோ கிராம் இறப்பர் எனவும் தெரிவித்தார். 2025 ஆம் ஆண்டில் இந்நாட்டின் தென்னை பயிர்ச்செய்கை இலக்கு 2,875 மில்லியன் தேங்காய்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அத்துடன், கிளைபோசேட் அதிகமாக பயன்படுத்துவது உள்ளிட்ட காரணங்களால் இலங்கையின் தேயிலை மற்றும் கறுவா என்பவற்றின் உயர் தரம் குறைவடையும் எச்சரிக்கை காணப்படுவதாகவும் அது தொடர்பில் அதிக கவனம் செலுத்துவது முக்கியமானது எனவும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
தேயிலை உரங்களின் தரம், மரமுந்திரிகை பயிர்ச்செய்கையை மேம்படுத்தல் உள்ளிட்ட இந்த அமைச்சுடன் சம்பந்தமான விடங்கள் தொடர்பிலும் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் கவனத்துக்குக் கொண்டுவந்தனர்.
கௌரவ அமைச்சர்கள், கௌரவ பிரதி அமைச்சர்கள், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களின் அதிகாரிகளும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர். (News.lk)


![[HeaderImage]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgJMdokShENf_fv3uE0ltKgwfRbUAvH9QYTwU3n7Ix2LMxDrYK1wjOi0GlLWmI-ET1YwOeCtosmKRZCP_qoYvJh_d_8n6vccPkYWCNz4oAhmGOh_2mLP58re2YXSc-CmRORAkcVLo-V5I2Hla_TTEe2Nmo9pVmIcykK-JMhdP3sFTECF-mgVKHNOdovCSE/s16000/1333758.jpg)





No comments