முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன உட்பட இரண்டு பேருக்கு எதிராக இலஞ்ச, ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் ஆணைக்குழு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குறித்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இது 2014 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பதவியேற்பின் இரண்டாம் ஆண்டு விழாவிற்காக இலங்கை முதலீட்டு சபையின் நிதியைப் பயன்படுத்தி செய்தித்தாள்களில் விளம்பரங்கள் மூலம் அரசாங்கத்திற்கு 1.7 மில்லியன் ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டதாகக் கூறப்படும் ஒரு சம்பவத்துடன் தொடர்புடையது என தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன மற்றும் இலங்கை முதலீட்டு சபையின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் ஜெயந்த எதிரிசிங்க ஆகியோருக்கு எதிராக வழக்குத் தொடர இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
மஹிந்த ராஜபக்சவின் இரண்டாவது பதவியேற்பு விழாவைக் கொண்டாடும் விதமாக, 2014 நவம்பர் 19 ஆம் திகதி 11 செய்தித்தாள்களில் இலங்கை முதலீட்டு சபையின் நிதியைப் பயன்படுத்தி செய்தித்தாள் துணைப் பத்திரிகைகளை வெளியிட்டதன் மூலம் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் இழைக்கப்பட்டுள்ளதாக இலஞ்ச ஒழிப்பு ஆணையகம் இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளது.
இந்த வழக்கில், பிரதிவாதிகள் மீது 5 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.15 நபர்கள் சாட்சிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர். மேலும் 21 ஆவணங்கள் சாட்சியங்களாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. (LSN)
No comments