நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வீதி விபத்துகளில் ஒன்றரை வயது குழந்தை உட்பட மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்துக்கள் நேற்று (29) மாத்தளை, மதவாச்சி மற்றும் கட்டான பொலிஸ் பிரிவுகளில் இடம்பெற்றுள்ளன.
மாத்தளை பொலிஸ் பிரிவின் மாத்தளை-ரத்தோட்ட வீதியில் உள்ள மானந்தண்டாவெல பகுதியில், முச்சக்கர வண்டியொன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியில் கவிழ்ந்ததில் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.
விபத்தில் முச்சக்கர வண்டியின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த சாரதியின் தாயாரும் சிறு குழந்தையும் காயமடைந்து மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் குழந்தை உயிரிழந்தது.
மாத்தளை பகுதியில் வசித்த ஒன்றரை வயது குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
இதற்கிடையில், மதவாச்சி பொலிஸ் பிரிவின் A09 வீதியில் உள்ள வெலிஓயா சந்தியில் லொறி ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிள் மற்றும் மற்றொரு லொறியுடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் பலத்த காயமடைந்து ரம்பேவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் மதவாச்சி பகுதியைச் சேர்ந்த 58 வயதானவர் என தெரியவந்துள்ளது.
இதேவேளை, கட்டான பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நீர்கொழும்பு-மீரிகம வீதியில் லங்காமாதா வீதி திரும்பும் சந்தியில் கெப் வண்டி ஒன்று வலதுபுறம் திரும்ப முயன்றபோது, எதிர் திசையில் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் பலத்த காயமடைந்து நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் கட்டான பகுதியை சேர்ந்த 23 வயதான இளைஞர் என தெரியவந்துள்ளது. (Adaderana)
No comments