பதுளை மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பில் சுமார் 68 வீதமானவை மண்சரிவு அபாயத்தைக் கொண்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
டித்வா பேரிடர் காரணமாக பதுளை மாவட்டத்தில் மட்டும் 368 பிரதான மண்சரிவுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அந்த நிறுவனத்தின் பதுளை மாவட்ட புவியியலாளர் ஹர்ஷனி பெரேரா தெரிவித்துள்ளார்.
இந்த மண்சரிவு அபாயம் காரணமாக, இதுவரை சுமார் 650 வீடுகள் அதியுயர் அபாய நிலைக்குள் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, பேரிடர் காரணமாக அதிக பாதிப்பை எதிர்கொண்ட கண்டி மாவட்டத்தில் 32 சிறுவர்கள் தங்களது தந்தையையும், 7 சிறுவர்கள் தங்களது தாயையும் இழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
டிட்வா சூறாவளியினால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் கண்டி மாவட்டத்தில் இதுவரையில் 241 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 68 பேர் காணாமல் போயுள்ளனர்.
அனர்த்தங்களினால் கண்டி மாவட்டத்தில் 1,959 வீடுகள் முழுமையாகவும், 16,565 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. அத்துடன், 55,804 குடும்பங்களைச் சேர்ந்த 180,335 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கண்டி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற அனர்த்த முகாமைத்துவ குழுக்கூட்டத்தில், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் மாவட்ட உதவிப் பணிப்பாளர் இந்திக ரணவீர இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார். (Lankasri)


![[HeaderImage]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhCidzQGdbjdpCRUn5Ly_lWGmjBAvnXQ_Fu9CjQQKnJxb0yMxFzPJ8irDY1a1Gd1sKOQU8__grA-ihuW-fEBoGt2Fy8TcepmajlG5jU2NOzkE8VDn-U0BxIg4dR1_v1HLGkWksDfRzh37Ow_y5XVgSnDDE7GLUHIBUcPwEgHuubRlgHx5J6zBgJs-Hx8Qk/s16000/44116-.jpg)





No comments