2025 ஆம் ஆண்டுக்கான சர்வதேச ஆசிரியர் தினக் கொண்டாட்டங்கள் நாடுபூராகவும் உள்ள அநேக பாடசாலைகளில் இந்த வாரம் நடந்தேறின.
குருநாகல், பானகமுவ அந்நூர் தேசிய பாடசாலையிலும் சர்வதேச ஆசிரியர் தினத்தை சிறப்பிக்க பல்வேறு நிகழ்ச்சிகள் இன்று புதன்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
கல்லூரியின் அதிபர் ஜனாப் இர்ஷாத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பாடசாலையின் ஆசிரியர்களும், மாணவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.
பாடசாலை மாணவர்களின் band வாத்தியக் குழுவோடு ஆசிரியர் குலாம் அழைத்து வரப்பட்டு காலை ஆராதனை நிகழ்ச்சி நடாத்தப்பட்டது. பின்னர் ஆசிரியர்களுக்கான போட்டிகளாக தண்ணீர் நிறைக்கும் போட்டி, யோகட் ஊட்டும் போட்டி, உரிய பலூனை பெரும் போட்டி என வித்தியாசமான போட்டிகள் பலவும் நடைபெற்றிருந்தன.
நிகழ்வுகளில் தொடர்ந்து மாணவர் மன்றமும் இடம் பெற்றிருந்தது. இதில் மாணவர்கள் நிகழ்ச்சிகளோடு ஆசிரியர்களது சில நிகழ்ச்சிகளும் மேடையேற்றப் பட்டிருந்தன. இதில் அதிபர் கிராத் ஓதி நிகழ்வுகளை ஆரம்பம் செய்து வைத்தமை நல்ல தலைமைத்துவத்துக்கு முன்னுதாரணமாக எடுத்துக் காட்டப்பட்டிருந்தது.
கல்லூரியின் 2025 ஆம் ஆண்டு உயர்தர பிரிவு மாணவர்களால் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் பாடசாலையின் மாணவத் தலைவர்களால் ஆசிரியர்களுக்கான நினைவுச் சின்னம் அணிவிக்கப்பட்டு வரவேற்கப் பட்டிருந்ததாக எமது பானகமுவ பிராந்திய செய்தியாளர் சப்ரா ஷாமில் தெரிவித்திருந்தார்.
No comments