B.M. பயாஸ்(ஊடகவியலாளர்)
காத்தான்குடியில் உள்ள சிகை அலங்கார நிலையம் ஒன்றில் சிகை அலங்காரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இளைஞர் ஒருவரை கத்தியால் குத்தி தாக்கிய சம்பவம் இன்று (18) காலை இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த தாக்குதலில் படுகாயமடைந்த 25 வயதுடைய ஹைராத் நகரைச் சேர்ந்த அஸி அஸ்பாக் என்ற இளைஞர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி 06, அப்துல் லத்தீப் சின்னலெவ்வை மாவத்தையில் அமைந்துள்ள சிகை அலங்கார நிலையத்தில் சம்பவ தினமான இன்று காலை, குறித்த இளைஞர் சிகை அலங்காரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளையில் அங்கு உள் நுழைந்த மற்றொரு இளைஞன், அவரை கத்தியால் குத்தி தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதன் விளைவாக அவர் படுகாயமடைந்துள்ளார்.
இதனையடுத்து தாக்குதலை நடத்திய இளைஞன் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்று, பின்னர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த நிலையில், அவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில், கத்திக்குத்துக்கு இலக்கான இளைஞனுக்கும் தாக்குதல் நடத்திய இளைஞனுக்கும் இடையே கடந்த சில தினங்களாக வாய்த்தர்க்கம் மற்றும் கை கலப்பு சம்பவங்கள் இடம்பெற்று வந்துள்ளமை தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் பின்னணியிலேயே இந்த கத்திக்குத்து தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு தடயவியல் பிரிவு பொலிஸார் வரவழைக்கப்பட்டு மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.


![[HeaderImage]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh1IVh_I3v-XTKkB8HxJjems8ALQlByEzOJnTw1kcjSpmVga9RZNI5CUNchaiyYeNQJ0RtBY7Eqok8J4yqnSBbQIGOncVYuMwIPaGwdoyX9pyOW7Kp7JYLBs5gfji_4X3FSGnSxVx_0Etg-wSl201m74Yh73wBveVuvwUu9Gt5lYow-jPrFuDKckewZXIk/s16000/IMG-20251218-WA0213.jpg)




No comments