கோட்டாபயவிற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் அதிரடி உத்தரவு
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தாக்கல் செய்திருந்த ரிட் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமலேயே தள்ளுபடி செய்யுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான உத்தரவு இன்றைய தினம் (01.10.2026) பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உத்தரவு பிறப்பிப்பு
2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தம்மை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கைது செய்து தடுத்து வைப்பதை தடுத்து உத்தரவிடுமாறு கோரி அவசர அவசரமாக கோட்டாபய ராஜபக்ச இந்த மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு, மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதியரசர் ரோஹந்த அபேசூரிய மற்றும் நீதியரசர் சரத் திஸாநாயக்க ஆகியோர் அடங்கிய இரு நீதியரசர்கள் கொண்ட அமர்வு முன்னிலையில் பரிசீலிக்கப்பட்டதைத் தொடர்ந்து, குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்த மனு தொடர்பான வாய்மூல சமர்ப்பனங்கள் நிறைவடைந்த நிலையில், மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதா
அல்லது ஆரம்ப நிலையிலேயே தள்ளுபடி செய்வதா?
என்பது தொடர்பில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கவிருந்தது.
அதற்கமைய குறித்த மனு இன்று எடுத்துக் கொள்ளப்பட்ட போது அதனை தள்ளுபடி செய்து மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வெளிநாட்டுப் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (lankasri)



No comments